செம்மணி விசாரணையில் நீதி கிடைக்கும்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் எந்தவித தலையீட்டையோ அல்லது செல்வாக்கையோ செலுத்தவில்லை என்றும், விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“செம்மணி விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் எந்தவொரு அரசும் மேற்கொள்ளாத நடவடிக்கைகளைத் தற்போதைய அரசு முன்னெடுத்து வருகின்றது.
பலர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தபோதிலும், இந்த விசாரணையில் நாம் எந்தவித தலையீட்டையோ அல்லது செல்வாக்கையோ செலுத்தாமல், அது நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்துள்ளோம்.
செம்மணி விவகாரம் மட்டுமன்றி, நாட்டில் இடம்பெறும் அனைத்து விசாரணைகளையும் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்குப் பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.
செம்மணி விவகார விசாரணைகளுக்கு தற்போதைய உள்நாட்டுப் பொறிமுறைகளே போதுமானவை என நினைக்கின்றேன். இந்த அரசின் மீதும் நாட்டின் நீதித்துறை மீதும் வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அன்றாடம் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து அநீதிகளுக்கும் நிச்சயமாக நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை நாம் ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.

Comments 0
Be the first to comment.