காய்ந்த மிளகாய் விலை அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து காய்ந்த மிளகாய் இறக்குமதி செய்யப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உள்ளூர் சந்தையில் காய்ந்த மிளகாயின் விலை கணிசமாக அதிகரித்து, ஒரு கிலோகிராம் 1,300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவாவை மேற்கோள்காட்டி விநாயக சுந்தரம் தெரிவிக்கையில், தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால், 100க்கும் மேற்பட்ட காய்ந்த மிளகாய் கொள்கலன்கள் சுங்கப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனம் மற்றும் உணவுப் பரிசோதகர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த மிளகாய்ப் பொருட்கள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படமாட்டாது எனவும், அவற்றை ஏற்றுமதி செய்த நாட்டுக்கே மீண்டும் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையை அடுத்து, இந்திய வர்த்தக சங்கங்கள் இலங்கைக்குக் காய்ந்த மிளகாய் ஏற்றுமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், சந்தையில் கடும் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நிலவும் எல் நினோ காலநிலையினால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் விநாயக சுந்தரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments 0
Be the first to comment.