—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

காவந்திஸ்ஸ யானை உயிரிழப்பு

காவந்திஸ்ஸ யானை உயிரிழப்பு

காவந்திஸ்ஸ எனப்படும் கம்பீரமான யானையின் திடீர் உயிரிழப்பு தமக்கும் சுற்றாடல் அமைச்சுக்கும் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கம் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனப் பரப்பப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த யானையின் உயிரிழப்பு தொடர்பாக வெளியில் கருத்துத் தெரிவிக்கும் பலரையும் விடத் தனக்கே அதிக அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், யானையின் உயிரைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அத்துடன், கால்நடை மருத்துவர்கள் ஊடாக உச்சகட்ட சிகிச்சை வசதிகளும் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் யானை உயிரிழந்தமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கமோ அல்லது வனஜீவராசிகள் திணைக்களமோ யானைகளைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என சமூகத்தில் பரப்பப்படும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவுக்கு மனித – யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்கும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்குமான பாரிய வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளின் நேரடிப் பலனாகவே மனித – யானை மோதல்கள் படிப்படியாகக் குறைந்து வரும் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும் அன்டன் ஜெயகொடி மேலும் குறிப்பிட்டார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.