மிகத் தீவிர புயலாக மாறும் அர்னாப்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல், இன்று (26) நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாகவும், நாளை (27) மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்றதாக, இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5.30 மணியளவில், இந்தப் புயல் கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து வடமேற்கே சுமார் 590 கிலோமீற்றர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 650 கிலோமீற்றர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 730 கிலோமீற்றர் தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திலிருந்து கிழக்கே 830 கிலோமீற்றர் தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லாவிலிருந்து கிழக்கே 910 கிலோமீற்றர் தொலைவிலும் காணப்பட்டது.
இந்தப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவுக்குள் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் தீவிரப் புயலாகவும், நாளை (27) அதே பகுதியில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், எதிர்வரும் 28ஆம் திகதி முற்பகல் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன், காற்றின் வேகம் மணிக்கு 140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழகக் கரையோரம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நீடிக்கிறது. இதனுடன் தொடர்புடைய வளிமண்டலச் சுழற்சி 7.6 கிலோமீற்றர் உயரம் வரை பரவியுள்ளது. இலட்சத்தீவுப் பகுதியிலிருந்து இந்த வளிமண்டலச் சுழற்சி வரை நீளும் வளிமண்டலத் தாழ்வுப் பாதையும் தொடர்ந்து நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று (26) மற்றும் நாளை (27) மழை தொடரக்கூடும் எனவும், சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்வதற்கான இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாளை (27) இராமநாதபுரம் மாவட்டத்துக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Comments 0
Be the first to comment.