மைதான புனரமைப்புக்கு 5 மில்லியன்!
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் நீர் தேங்குவதால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்க்கும் வகையில், வடிகால் வசதிகளை ஏற்படுத்துவதற்காக 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 23.10.2026 அன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், பாடசாலைகளின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ், மன்னார் கல்வி வலயத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் வங்காலை சென். ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும், மடு கல்வி வலயத்தில் அடம்பன் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், பாடசாலைகளில் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இத்திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், தேசிய மக்கள் சக்தியின் நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments 0
Be the first to comment.