கொ**லைத் திட்டம்: துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அங்குருவாந்தோட்டை பகுதியில் வர்த்தகர் ஒருவரைக் கொ**லை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 32 வயதுடைய நபர் ஒருவர், டி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘வெல்லே சாரங்க’வின் திட்டத்துக்கு அமைவாகவே இந்தக் கொ**லைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகருக்குச் சொந்தமான தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் பழுதடைந்த உலோகப் பொருட்கள் தொடர்பில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உலோகப் பொருட்களை ‘வெல்லே சாரங்க’ கும்பலுக்கு வழங்க வர்த்தகர் மறுத்தமையே கொ**லைத் திட்டத்துக்குக் காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
அங்குருவாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குற்றத்தடுப்புப் பிரிவினர் பல நாட்களாகக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரின் வீட்டுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த டி-56 ரக தாக்குதல் துப்பாக்கி, ஒரு மெகசீன் மற்றும் 16 தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி களுத்துறை பகுதியில் நீண்டகாலமாகப் பல்வேறு குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், ‘பஸ் லலியா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் லலித் கண்ணங்கராவுடன் தொடர்புடைய கும்பலால் இந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments 0
Be the first to comment.