—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கோட்டாபய காலத்து நிலைமை மீண்டும் வருமா? ஐ.ம.ச. கேள்வி

கோட்டாபய காலத்து நிலைமை மீண்டும் வருமா? ஐ.ம.ச. கேள்வி

இலங்கையில் அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றின் காரணமாக தற்போதைய அரசு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தை நோக்கியே நாட்டை அழைத்துச் செல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ரோஹண பண்டார மேலும் சுட்டிக்காட்டுகையில்,

"நாட்டின் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள பணவீக்கமும், ஆட்சியாளர்களின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுமே தற்போதைய நெருக்கடிகளுக்கு முதன்மைக் காரணமாகும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களினதும் விலைகள் பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு தினசரி உயர்ந்து வருகின்றன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, கடந்த 40 மாதங்களில் பதிவான மிக உயர்ந்த பணவீக்க விகிதமாக 8.8 சதவீதம் தற்போது பதிவாகியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகவும், அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வழங்குவதாகவும் கூறியவர்கள், தற்போது மேலதிக வரிகளைச் சுமத்தி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளனர்.

மேலும், எரிவாயு விநியோகம் சீர்குலைந்துள்ளதுடன், நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகத் தொடங்கியுள்ளன. தடையற்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை முன்னெடுப்பதில் அரசு முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது" என்றார்.

பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் குறித்து அவர் பேசுகையில்,

"பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் மத்தியில் எழும் அதிருப்தியை முறியடிக்க, கடந்த 30 ஆண்டுகால யுத்த காலத்தில்கூட கொண்டுவரப்படாத கடுமையான சட்டதிட்டங்களை அரசு கொண்டுவர முனைகின்றது. மக்கள் வீதியில் இறங்கிப் போராடும்போது, அவர்களின் தோற்றம், பச்சை குத்தல்கள் மற்றும் சிகை அலங்காரங்களைக் காரணம் காட்டி அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன.

இராணுவத்துக்குச் சிவில் விவகாரங்களில் அதிகாரங்களை வழங்கி, ஒரு பொலிஸ் அரசை உருவாக்கி நிரந்தரமாக ஆட்சியில் நீடிக்க அரசு திட்டமிடுகின்றது. ஊடக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி, தேர்தல்களை ஒத்திவைத்து ஆட்சியை முன்னெடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு விடப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்.

அடக்குமுறைகளைக் கையாண்ட கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் விரட்டியடித்த வரலாற்றைத் தற்போதைய ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது. மக்கள் எழுச்சி உருவாகும் முன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், இந்த அரசின் ஆயுட்காலம் மிகக் குறுகியதாகவே அமையும்" என்றார்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் குறித்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

"எதிர்க்கட்சிகளால் 50 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இம்மாதம் 3ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. எனினும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விடயங்களைக் காரணம் காட்டி விவாதத்தைத் தட்டிக்கழிக்க அரசு முயல்கின்றது. சபாநாயகர் ஆளுந்தரப்பின் தேவைகளுக்கேற்ப ஒரு 'சமிக்ஞைக் கம்பம்' போலச் செயற்படுகின்றார்.

ஊழலற்ற ஆட்சியை நடத்துவதாகக் கூறிக்கொண்டு, முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசைப் போலவே ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் இரட்டை வேடத்தை இந்த அரசும் தொடர்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் காட்டி நாடாளுமன்றத்தில் மிரட்டல் விடுக்காமல், சபாநாயகரை உடனடியாகப் பதவி விலகச் செய்ய வேண்டும் அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.