—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நாட்டின் அபிவிருத்தியில் கவனமில்லை; அநுர மீது குற்றச்சாட்டு

நாட்டின் அபிவிருத்தியில் கவனமில்லை; அநுர மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் கவனம் செலுத்தாமல், பெரும்பாலான நேரத்தை எதிர்க்கட்சியினரையும் சஜித் பிரேமதாஸவையும் விமர்சிப்பதிலேயே செலவிட்டு வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசின் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து நிரோஷன் பாதுக்க மேலும் சுட்டிக்காட்டுகையில்,

"இலங்கை வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன, மகாவலி திட்டம், 10 இலட்சம் வீடுகள் திட்டம், கொழும்புத் துறைமுக வளர்ச்சி, கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்புரட்சி போன்றவற்றைத் தகுதியான அமைச்சர்களிடம் ஒப்படைத்து நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தினார்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி எந்தவொரு முறையான நிர்வாகத் திட்டமுமின்றி, தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டிக்கொண்டு மட்டுமே நேரத்தைக் கழித்து வருகின்றார்.

மேலும், நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ், நிதி அமைச்சில் இதுவரை 2.5 மில்லியன் டொலர்களும், தனியார் வங்கியொன்றில் 14 பில்லியன் ரூபாவும் காணாமல்போயுள்ளன. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான ஒருவரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கெஸ்பேவ பகுதியில் கிராம மட்டத்தில் அரசை விமர்சிப்போரின் பட்டியலைச் சேகரிக்குமாறு கோரப்பட்டுள்ளமை, அபிவிருத்தியை நோக்கிய நகர்வாக இல்லாமல் அடக்குமுறையை நோக்கிய நகர்வாகவே உள்ளது" என்றார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்து அவர் பேசுகையில்,

"தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இலாபத்தில் இயங்கிவரும் போதிலும், குடிதண்ணீரைச் சுத்திகரிக்கத் தேவையான குளோரின் மற்றும் அலுமினியம் போன்ற இரசாயனப் பொருட்களின் இருப்பு முற்றாகத் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது.

வழக்கமான தரக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் தவிர்க்கப்பட்டு, காலாவதியான இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டால் மக்களின் சுகாதாரத்துக்குப் பெரும் ஆபத்து ஏற்படும். அரசு உடனடியாகப் புதிய குளோரின் இருப்புகளை இறக்குமதி செய்ய வேண்டும்.

அதேபோல், அம்பாந்தோட்டை சீனாபேக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், அதானியின் 434 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் மற்றும் 331 மில்லியன் டொலர் மதிப்பிலான சீன முதலீட்டுத் திட்டம் ஆகிய முக்கிய வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளன.

ஊழல் விவகாரங்களில் தொடர்புடைய நபர்களுக்கு அரசு உயர் பதவிகள் வழங்கி வருகின்றது. பொலன்னறுவை பகுதியில் விவசாயிகள் நெல்லுக்கு கிலோவுக்கு 120 ரூபாகூடக் கிடைக்காமல் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்" என்றார்.

சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"நாடாளுமன்றச் சபாநாயகருக்கு எதிராக 50 காரணங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்க்கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 48 காரணங்கள் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையிலிருந்தே எடுக்கப்பட்டவையாகும்.

சபாநாயகர் சட்டவிரோதமான முறையில் மூன்று உத்தியோகபூர்வ இல்லங்களைப் பராமரித்து வருவதுடன், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரும் தகவல்களை நாடாளுமன்ற ஊழியர்கள் வழங்கக் கூடாது எனவும் தடுத்து வருகின்றார். இதனால் அவர் மீதான ஊழல் விசாரணைகள் நிலுவையில் காணப்படுகின்றன" என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.