நீதிவான் முன்னிலையில் மூவர் செய்த அதிர்ச்சி செயல்!

திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மூன்று சந்தேகநபர்கள் குற்றவாளிக் கூண்டில் வைத்து பிளேட்டினால் தங்களது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
கடந்த திங்கட்கிழமை நிலாவெளிப் பகுதியில் சட்டவிரோதமாகக் கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் திருகோணமலைத் தலைமையகப் பொலிஸாரால் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த ஐந்து சந்தேகநபர்களும் இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவர்களில் மூவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிளேட்டினால் தங்களது கழுத்தைத் தாங்களே அறுத்துக் கொண்டனர். இதனால் அதிகளவில் இரத்தம் வெளியேறியதையடுத்து, அங்கிருந்த பொதுமக்களும் சட்டத்தரணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
முகேஸ், அஜித்திரன் மற்றும் ரம்ஸான் ஆகிய மூவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் முகேஸின் கழுத்தில் ஏற்பட்ட வெட்டுக்காயம் ஆழமாக இருந்ததால், அதிகளவில் இரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸாரும் நீதிமன்ற அதிகாரிகளும் காயமடைந்த மூவரையும் மீட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுத் தையல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது அவர்கள் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Comments 0
Be the first to comment.