—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சட்டவிரோத காடழிப்பு: ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

சட்டவிரோத காடழிப்பு: ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

ஆவணங்கள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக மக்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளையும் விவசாய நிலங்களையும் துப்புரவாக்கத் தடை விதிக்கும் வனவளத் திணைக்களம், மறுபுறம் சட்டவிரோத காடழிப்புகளைக் கட்டுப்படுத்தத் தவறுவதுடன், அவை தொடர்பான திணைக்களப் பொறுப்புக்கூறலையும் வெளிப்படுத்துவதில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் சுற்றாடல் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (03.11.2026) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்,

முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டத்தில் ஒருபுறம் வன ஒதுக்குப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. பொதுமக்களிடம் காணி ஆவணங்களைக் கோரும் வனவளத் திணைக்களம், சட்டவிரோத காடழிப்புகள் மற்றும் படையினரின் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் அமைதி காக்கின்றது.

ஆவணங்கள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக மாமரங்களும் வேப்பமரங்களும், வீட்டு அத்திவாரங்களும் தென்படும் காணிகளைக்கூடத் துப்புரவாக்கத் தடை விதிக்கும் வனவளத் திணைக்களம், படையினரதும் அத்துமீறிய செயற்பாட்டாளர்களதும் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஏன் மௌனம் காக்கின்றது?

ஒருபுறம் காடுகளைப் பாதுகாப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. மறுபுறம் சட்டவிரோத காடழிப்புகளைக் கட்டுப்படுத்தத் தவறுவதுடன், அவை தொடர்பான திணைக்களப் பொறுப்புக்கூறலையும் உரிய முறையில் முன்னெடுக்கவில்லை.

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக மக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர். நாம் அங்கு சென்று பார்வையிட்டு, அவற்றை உறுதிப்படுத்தி வனவளத் திணைக்களத்திற்குத் தெரிவிக்கும் வரையிலும் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திரிவச்சகுளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற காடழிப்பு ஆகியவை தொடர்பில் பொதுமக்கள் நேரடியாக வனவளத் திணைக்கள அதிகாரிகளையே குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, தமது எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத மரம் வெட்டுதல், நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதைக் கண்காணிக்கத் தவறுதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில், வனவளத் திணைக்களத்தின் பொறுப்புக்கூறலை மேலும் வலுப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுக்குமா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி,

“நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எனது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ள சட்டவிரோத காடழிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்படும்.

வனப் பாதுகாப்புப் பகுதிகளில் காணப்படும் காணிகளை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதற்கோ அல்லது காடுகளை அழிப்பதற்கோ நாம் அனுமதி வழங்குவதில்லை.

இருப்பினும், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வனப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. அவ்வாறு வெட்டப்படும் மரங்கள் மரக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படுகின்றன.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இங்கு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பார்க்குமாறு அமைச்சரிடம் மீண்டும் வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.