சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு: சஜித் கடும் குற்றச்சாட்டு
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதை சபாநாயகரே நிராகரித்தமையானது, பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல் மட்டுமன்றி ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மரண அடியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (03) பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், தற்போதைய சூழலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் பெருமளவில் வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அரசியலமைப்பின்படி, பாராளுமன்றம் என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்ப இயங்கும் இடமல்ல என்றும், அது மக்கள் இறையாண்மையைச் செயற்படுத்தும் சட்டவாக்க மன்றம் என்றும் சுட்டிக்காட்டினார்.
வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயக மரபில் சபாநாயகர் அரசியல் நடுநிலைமையைப் பேண வேண்டியவர் எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு எதிர்க்கட்சியின் நியாயமான குரலையோ அல்லது மாற்றுக் கருத்துக்களையோ அடக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுக்கு முரணானது எனச் சாடினார்.
சபாநாயகருக்கு எதிராக 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்தின் மூலம் அப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனக்கு எதிரான பிரேரணை குறித்து சபாநாயகரே தீர்மானம் எடுப்பது நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டிற்குத் தொடுக்கப்பட்ட மரண அடி என்றும், பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஜனநாயகத்திற்கான எல்லைகள் மூடப்பட்டு, நாட்டை ஒரு கட்சி ஆட்சிக்கும் சர்வாதிகாரத்திற்கும் அழைத்துச் செல்ல முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் இது தொடர்பான சிறப்புரிமைப் பிரச்சினையொன்றைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகருக்கு எதிரான சிறப்புரிமை மீறல் மனுவின் பிரதியை சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகரிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.