—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

245 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; ஒருவர் தப்பியோட்டம்

தமிழகத்தின் ராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற சுமார் 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 245 கிலோ பதப்படுத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போது, வாகனத்தை விட்டுவிட்டுத் தப்பியோடிய கடத்தல்காரரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், தமிழகக் கடல் வழியாக பீடி இலைகள், மஞ்சள், கடல் அட்டைகள், கடல் பல்லிகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மத்திய, மாநில உளவுத்துறையினர், கடற்படையினர், கடலோரக் காவல்படையினர் மற்றும் சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மண்டபம் கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்குப் பதப்படுத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படவுள்ளதாக ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, உச்சிப்புளி பேருந்து நிலையத்திற்கு அருகில் சுங்கத்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது, சோதனைக்காக நிறுத்தாமல் சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அதிகாரிகள் துரத்திச் சென்றுள்ளனர்.

பிரப்பன்வலசை அருகே கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பனந்தோப்புக்குள் வாகனத்தை விட்டுவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வாகனத்தைச் சோதனையிட்ட அதிகாரிகள், அதில் மூட்டை மூட்டையாகப் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து, வாகனத்துடன் கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு எடையிட்டபோது, சுமார் 245 கிலோ தடைசெய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இவற்றின் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 90 இலட்சம் ரூபாய் எனச் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தப்பியோடிய நபர் யார் என்பதைக் கண்டறிவதற்காகப் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் பதிவு இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சுங்கத்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.