—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சட்ட நடவடிக்கைக்குத் தயார்: கம்மன்பில

சட்ட நடவடிக்கைக்குத் தயார்: கம்மன்பில

தம் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்குச் சட்ட ரீதியாகப் பதிலடி கொடுக்கப் போவதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதுல்கோட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அனுராதபுர புனித நகர அபிவிருத்தி வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பௌத்த விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளியிட்ட முரண்பாடான கருத்துகளுக்கு அவர் இதன்போது கடுமையான பதிலளித்தார்.

ஸ்ரீ மகா போதியை 'வதந்தி மற்றும் கொடூரமான முறை' என வர்ணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் செயற்பாட்டைத் தர்க்க ரீதியாக விமர்சித்தபோது, அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அதற்கு முறையான பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்த கம்மன்பில, ஏனைய சில அமைச்சர்களும் தங்களது கூற்றுகளைத் திரிவுபடுத்திக் கருத்துகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிரானது அல்ல என மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்த வாதத்தை முற்றாக நிராகரித்த உதய கம்மன்பில, அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிரானது என்பதை நிரூபிப்பதற்காகத் தங்களால் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட 14 குறிப்பிட்ட காரணங்களை மீண்டும் நினைவுபடுத்தினார்.

ஜனாதிபதி பதவியேற்பின்போது பிரித் நூல் கழற்றப்பட்டமை, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் ஜயமங்கல கீதம் நிறுத்தப்பட்டமை, ருவன்வெலிசேய வெறும் நினைவுச்சின்னம் என வர்ணிக்கப்பட்டமை மற்றும் ஸ்ரீ மகா போதியை விமர்சித்த பிமல் ரத்நாயக்கவுக்கே அனுராதபுர புனித நகர அபிவிருத்திப் பொறுப்பு வழங்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் இதன்போது பட்டியலிட்டார்.

அனுராதபுரம் ருவன்வெலிசேயவைச் சுற்றி வேலி அமைக்க முயல்பவர்கள் மனநோயாளிகள் எனவும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தயார் எனவும் பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்த கருத்துத் தொடர்பில் பேசிய கம்மன்பில, "அந்த மனநோயாளி வேறு யாருமல்ல. ஆளும் கட்சியின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே" எனச் சான்றுகளுடன் சுட்டிக்காட்டினார்.

இலக்கம் 2477/44 என்ற வர்த்தமானி அறிவித்தலின் 7 ஏ பக்கத்தில், ருவன்வெலிசேயவைச் சுற்றிப் பாதுகாப்பு வேலி அமைப்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பிரதி சுகாதார அமைச்சரின் வாதத்தின் பிரகாரம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கே உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

புனித நகர அபிவிருத்தியின்போது ருவன்வெலிசேய தோண்டப்பட்டுச் சேதமடையும் எனத் தான் கூறியதாகப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர முன்வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு கம்மன்பில சவால் விடுத்தார்.

தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துபவர்கள், 'திசைகாட்டி என்றால் பொய்' என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தம்மைக் குறிவைத்து பொலிஸார் மற்றும் நீதிமன்றங்களை நாடும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், வர்த்தமானி அறிவித்தலில் உள்ள தவறுகளை மறைக்க முயலாமல், அதனை அரசாங்கம் உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.