—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவெடுத்துள்ள ‘முரசு’ சூறாவளி தீவிரமடைந்து வருவதால், வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் தொழில்புரியும் சிறிய படகு மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுக் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

"வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைய வானிலை அறிக்கையின்படி, மத்தியமேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் 'முரசு' எனும் சூறாவளி தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாகக் குறித்த கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் அலைகள் கொந்தளிப்பாகவும் மிகவும் சீற்றமாகவும் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\

இதற்கமைய, கற்பிட்டியிலிருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான வடக்கு மற்றும் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் தொழில்புரியும் சிறிய படகு மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஏற்கனவே இப்பகுதிகளில் கடலுக்குச் சென்றுள்ள சிறிய படகுகள், நிலவும் பலத்த காற்று காரணமாகப் பாதுகாப்பாகத் தொழிலில் ஈடுபட முடியாத அபாய நிலை உருவாகியுள்ளதால், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கோ அல்லது கரைக்கோ திரும்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனைய பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களும் தங்கள் பகுதிகளில் நிலவும் காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகளின் நிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

மேலும், கடலுக்குச் செல்லும்போதும், தொழிலில் ஈடுபடும்போதும், திரும்பும்போதும் உயிர்காப்பு அங்கிகளை கட்டாயம் அணிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தால் இனிவரும் நாள்களில் வெளியிடப்படும் வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு மீனவச் சமூகம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது" என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.