நாமல் விவகாரத்தில் அநுரவுக்கு எச்சரிக்கை

நாமல் ராஜபக்ஷவைச் சிறையில் அடைத்துள்ளதன் மூலம், இலங்கையில் மற்றொரு நெல்சன் மண்டேலாவை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வருகின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேவைக்கேற்பவே நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் தற்போது பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது.
எனினும், நாட்டின் நீதித்துறை மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நீதிபதிகள் எப்போதும் சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் உள்ள ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஷவுக்குத் தற்போது பிணை மறுக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவைச் சிறையில் அடைத்துவிட்டு, தமது அரசியல் பயணத்தைத் தடையின்றித் தொடரலாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நினைத்தால், அது முற்றிலும் தவறான கணக்கீடாகும்.
இதன் மூலம் அநுரகுமார திஸாநாயக்க இலங்கையில் மற்றொரு நெல்சன் மண்டேலாவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது, அநுரவின் அரசியல் இலக்குகள் முற்றிலும் தவறிப்போயுள்ளன என்பதையே தெளிவுபடுத்துகின்றது" என்றார்.

Comments 0
Be the first to comment.