சமூகப் பொறுப்பில் கல்முனை இளைஞர்கள்
அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியில் நேற்று (25ஆம் திகதி) பிற்பகல் சுமார் 3 மணியளவில் பெய்த கடும் அடைமழை காரணமாக, கடற்கரைப் பகுதியில் பெருமளவு மழைநீர் தேங்கியது. இதனால் நீர் கடலை நோக்கி வெளியேற முடியாமல் ஊருக்குள் பாயும் அபாயம் ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையைக் கண்ட ‘Green Field Condominium Management Committee’ அமைப்பைச் சேர்ந்த ஏ.பி.எம். தாரிக் ஆதம் பாவா, முஹம்மத் அஸ்லம் உள்ளிட்ட நால்வர் உடனடியாகச் சமூகப் பொறுப்புடன் செயற்பட முன்வந்தனர்.
மண்வெட்டிகளோ தொழில்நுட்ப உபகரணங்களோ இல்லாத நிலையிலும், அவர்கள் தங்கள் கைகளாலேயே மணலைத் தோண்டி அகற்றி, தேங்கிய நீர் கடலை நோக்கி வடிந்தோடுவதற்கான தற்காலிகப் பாதையை உருவாக்கினர்.
அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, தேங்கியிருந்த மழைநீர் முழுமையாகக் கடலை நோக்கி வழிந்தோடியதுடன், ஊருக்குள் நீர் புகும் அபாயமும் தவிர்க்கப்பட்டது.
“ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்குப் பெரிய அதிகாரமோ அதிகமான உபகரணங்களோ தேவையில்லை. நல்ல மனமும், சமூகத்தின் மீதான அக்கறையும், செயற்படத் தயாரான மனப்பான்மையுமே போதுமானது. மழை பெய்யும்போது குறைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்காமல், நம்மால் முடிந்த உதவியைச் சமூகத்திற்குச் செய்வதே உண்மையான சமூகப் பொறுப்பாகும்” என இச்சம்பவம் குறித்து அவர்கள் தெரிவித்தனர்.
சுயநலமின்றி உடனடியாகச் செயற்பட்டு, பொதுமக்களுக்கும் ஊருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த இக்குழுவினரின் நற்செயலைப் பிரதேச பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.