—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

புதிய சட்டமூலத்துக்கு எதிராகப் போராட்டம்

புதிய சட்டமூலத்துக்கு எதிராகப் போராட்டம்

மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தக்கூடிய நிலை உருவாகக்கூடாது என்றும், புதிய சட்டமூலத்துக்கு எதிராக முழுமையான போராட்டத்தை முன்னெடுத்து, அதனைத் தோற்கடிப்பதே தமது நோக்கம் என்றும் மக்கள் போராட்ட இயக்கத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைப் பிரகடனத்தின் ஊடாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச் செய்வதாக உறுதியளித்திருந்தது.

இருப்பினும், தற்போது ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்தல்’ என்ற பெயரில் புதிய சட்டமூலத்தைக் கொண்டுவந்து, அரசிடம் கோரிக்கைகளை முன்வைப்பதையும் அதற்கு அழுத்தம் கொடுப்பதையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்த முற்படுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது என அவர் தெரிவித்தார்.

1979ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமும், பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் ‘அரகலய’ போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அடக்குமுறைகளும் அதே அதிகாரங்களுடன் வேறு வடிவத்தில் மீண்டும் கொண்டுவரப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குள் ஜே.ஆர். ஜயவர்தனவும் ரணில் விக்கிரமசிங்கவும் வந்துவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பிய வசந்த முதலிகே, ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு தற்போது மக்களின் குரலை அடக்க முயல்வதாகவும் சாடினார்.

அத்துடன், ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கான சட்டமூலம்’ என்ற பெயரில் பொலிஸாருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது நாட்டில் பெரும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இலங்கைப் பொலிஸார் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளும் கசப்பான அனுபவங்களும் மக்கள் மத்தியில் காணப்படும் நிலையில், பொலிஸாரின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவது சாதாரண மக்களையும் போராட்டக்காரர்களையும் பொய்க் குற்றச்சாட்டுகளில் சிக்க வைப்பதற்கே வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரச நிறுவனங்கள் மூடப்படும்போதும், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வீதிக்கு வரும்போதும் அரசுக்கு எதிராக எழும் மக்கள் அலையை அடக்குவதற்காகவே இத்தகைய சட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எனவே, மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்களைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த ஜனநாயக விரோதச் சட்டமூலத்தை முற்றாகத் தோற்கடிக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் வசந்த முதலிகே தெரிவித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.