சிறுவர்களிடையே இரத்தச் சோகை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் அண்மைய நாட்களாகச் சிறுவர்கள் மத்தியில் இரத்தச் சோகை பாதிப்பு சடுதியாக அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கடந்த தினத்தில் மாத்திரம் ஒரே நாளில் 12 பேர் இரத்தச் சோகை பாதிப்பு காரணமாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறுவர்களிடையே இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவது பெற்றோர் மற்றும் சுகாதாரத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வைத்தியசாலையில் பாரிய குருதித் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால், விபத்துகள் மற்றும் குழந்தைப் பிரசவம் தொடர்பான அவசர சிகிச்சைகளின்போது உடனடியாகக் குருதி ஏற்றுவதில் பெரும் நெருக்கடி நீடித்து வருகின்றது.
இவ்வாறான சூழலில், இரத்தச் சோகை நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமை அந்தப் பகுதியில் பாரிய குருதித் தட்டுப்பாட்டு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், வடமராட்சிப் பகுதியில் வசிக்கும் தன்னார்வ இரத்தக் கொடையாளர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு நேரில் சென்று இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், தமது பிரதேசங்களில் இரத்ததான முகாம்களை ஒழுங்கமைக்கக்கூடியவர்கள் அது தொடர்பில் அறிவித்தால், நேரடியாகச் சென்று குருதி சேகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் பருத்தித்துறை இரத்த வங்கிப் பிரிவினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்புக்கு: 0212261345

Comments 0
Be the first to comment.