—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சிறைச்சாலை குறித்து நாமல் சீற்றம்

சிறைச்சாலை குறித்து நாமல் சீற்றம்

“சிறைச்சாலை நரகத்தைப் போன்று உள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும் நிம்மதியில்லை; உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியில்லை. அடிப்படை வசதிகள்கூட அங்கு இல்லை. பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் கவலையுடன் சிறையில் உள்ளேன். கைதுகளைக் தீவிரப்படுத்தி சிறைச்சாலைகளை நிரப்புவதால் மாத்திரம் போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்தை இல்லாதொழிக்க முடியாது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“புதிய சட்டங்களை இயற்றி, கைதுகளைத் தீவிரப்படுத்தி சிறைச்சாலைகளை நிரப்புவதால் மாத்திரம் போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்தை இல்லாதொழிக்க முடியாது. அரசு கொள்கை ரீதியில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

நச்சுப் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகச் சட்டத்தைச் செயற்படுத்த வேண்டும். ஆனால், இந்த விடயத்தில் கைது செய்து விளக்கமறியலில் வைப்பதால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும். அதனை விடுத்து, கைது செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் சிறைச்சாலைகளும் நிரம்புகின்றன. அங்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

எனவே, கைது செய்து சிறையில் அடைப்பதை வெற்றியாகக் கருதக்கூடாது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகைக் கணக்கில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், சமூகத்தில் போதைப்பொருள்களின் பாவனை குறைவடையவில்லையே. அதேபோன்று, அதிகளவில் துப்பாக்கிகள் கைப்பற்றப்படுவதாகக் கூறப்பட்டாலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளனவா? அப்படியென்றால், இந்த விடயத்தில் அரசு தோல்வியடைந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் படகுகளில் சிக்கியவர்கள் வருடக் கணக்கில் சிறைகளில் இருக்கின்றனர். அவர்களின் பிரதான வர்த்தகர்கள் எவரும் இங்கு இருப்பதில்லை. மக்களைச் சிறைகளில் அடைக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இவ்வாறு சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன என்றால், அது வெற்றியளிக்காது.

இதேவேளை, சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஞானசார தேரர், விடுதலைப் புலிகள் தொடர்பில் தொடர்புடைய நபர் ஒருவர் குறித்து புலனாய்வு அதிகாரிகளைப் பாதுகாப்பது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேபோன்று, பொலிஸ்மா அதிபரும் நீதிமன்றத்துக்குப் பொய்யான தகவல்களை வழங்கி, மக்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பை மதிக்காத பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பதையும் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்” என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.