சிறையில் அடைத்தாலும் நாமலே ஜனாதிபதி: சாந்த பண்டார அதிரடிக் கருத்து

நாமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டாலோ அல்லது அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலோ கூட, தேர்தலுக்குப் பின்னர் அவரை நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான ‘பிளான் பி’ திட்டம் தமது கட்சியிடம் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாமல் ராஜபக்ஷவை அரசு சிறையில் அடைத்து வைத்திருந்தாலும், அவரை நாட்டின் ஜனாதிபதியாக்கும் உத்தி எமது கட்சியிடம் உள்ளது.
ஒருவேளை, நாமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், அதனை எதிர்கொள்ளும் வகையில் ‘பிளான் பி’ திட்டம் எம்மிடம் உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் என எந்தவொரு பிரதான தேர்தல் நடைபெற்றாலும், அந்தத் தேர்தல் முடிவடைந்து மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் நாமல் ராஜபக்ஷ நிச்சயமாக நாட்டின் ஜனாதிபதியாவார்.
இது உறுதியாக நடக்கும். இதனை ஊடகங்கள் குறித்து வைத்துக்கொள்ள முடியும்" என்றார்.
தற்போதைய அரசியல் பின்னடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,
"தற்போதைய சவால்மிக்க அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, எங்களது ‘பிளான் பி’ திட்டம் தொடர்பான மேலதிக இரகசிய விவரங்களை இப்போது வெளிப்படுத்த விரும்பவில்லை.
நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்றால் நாமல் ராஜபக்ஷ பிரதமராவார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் அவர் ஜனாதிபதியாவார்.
எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் எவ்வித அச்சமும் இன்றித் தைரியமாக இருக்க வேண்டும்" என்றார்.

Comments 0
Be the first to comment.