யாழ். வைத்தியசாலையில் மறக்க முடியாத துயரம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலைச் சமூகத்தினரும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், வைத்தியசாலைப் பணியாளர்கள் 21 பேர் உட்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், பலரும் காயமடைந்தனர்.
மருத்துவ சேவைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த இந்தப் படுகொலையில் உயிரிழந்தவர்களை, 39 ஆண்டுகள் கடந்தும் உறவினர்களும் வைத்தியசாலைச் சமூகத்தினரும் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.