—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

செம்மணி அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு

செம்மணி அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு

பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தடயவியல் தொல்லியல் அகழாய்வுக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாகவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் மக்கள் செயல் அமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைப்பின் பிரதிநிதிகள் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த இடைக்கால அறிக்கையில், சித்துப்பாத்தி தளம் முறையான புதைப்பு நடைமுறைகளுடன் ஒத்துப்போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிகளவிலான புதைப்புகள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும், இறந்தவர்களின் உடல்களை விரைவாக அப்புறப்படுத்தும் நோக்கில் இத்தகைய புதைவுகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி சித்துப்பாத்தி மயானம் என்பது சைவர்களின் எரிகாடு என்ற விடயத்தைத் தாண்டிய முக்கியத்துவம் கொண்டது எனக் குறிப்பிட்ட அவர்கள், 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த காலப்பகுதியில், கொடூரமான இராணுவச் சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள பகுதியில் அமைந்திருந்த இந்த மயானத்தின் பின்னணியைத் தொல்லியல் குழுவினர் வசதியாக மறைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.

மனித எச்சங்களில் காணப்படும் இறப்பின்போதான காயங்கள், ஆடைகள் அகற்றப்பட்டுப் புதைக்கப்பட்ட முறை, சித்திரவதைக்கான தடயங்கள் மற்றும் அருகிலிருந்த இராணுவ முகாம்கள் தொடர்பில் அறிக்கையில் எவ்வித குறிப்புகளும் இடம்பெறாமை பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முந்தைய அறிக்கைகளில் ‘மனிதப் புதைகுழி’ என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தி வந்த பேராசிரியர், தற்போதைய அறிக்கையில் அதனை வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாகவும், இது அறிக்கையின் துல்லியத்தன்மை தொடர்பில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஆய்வுக்குழுவினர், மக்களின் நீண்டகால நீதிக்கான கோரிக்கைகளுக்கு விசுவாசமாகச் செயற்படாமல், அரசின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செயற்படுவதாகவும் அவர்கள் விமர்சித்தனர்.

சித்துப்பாத்தியில் மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் மீதான கார்பன் காலவியல் பரிசோதனைகள் இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறைகளுக்குள் முடக்கப்படக் கூடாது என்றும், உலகளாவிய நியமங்களுக்கு அமைவாகச் சர்வதேச மேற்பார்வைப் பொறிமுறையின் கீழ் அவை முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

எனவே, செம்மணி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பான நீதிவிசாரணைகளுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலையீட்டுடன் கூடிய நீதியான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உடனடியாக உருவாக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் சார்பில் வலியுறுத்துவதாகவும் மக்கள் செயல் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.