வடக்கு, கிழக்கில் கனமழை அபாயம்

அரபிக்கடலில் இருந்து நகர்ந்து வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தமிழ்நாட்டின் ஊடாக வங்காள விரிகுடாக் கடலுக்குள் நுழையத் தொடங்கியுள்ளதால், வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியும் புவியியல் மற்றும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அவர் வெளியிட்ட விசேட வானிலை அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வளிமண்டலச் சுழற்சி இன்று திங்கட்கிழமை அதிகாலை தென்கிழக்குத் திசை நோக்கி நகர்ந்து, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவுக் கடற்பகுதிகளூடாகத் திருகோணமலைக் கடற்கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பின்னர் மீண்டும் வடகிழக்குத் திசை நோக்கி நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தனித்த நிகழ்வாக ‘அர்னாப்’ புயலைப் பின்தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்காள விரிகுடாவின் சூறாவளி வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு முற்றிலும் புதியது எனக் குறிப்பிட்ட அவர், இந்த நகர்வு காரணமாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்கள் விசேட அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமை முழுவதும் பரவலாகக் கனமழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.
தீவகப் பகுதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலை வரை மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதுடன், தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயமும் காணப்படுகின்றது.
இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், மலைப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அர்னாப் புயல் மற்றும் வளிமண்டலச் சுழற்சியின் தாக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென்கிழக்குக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மழையுடன் கூடிய வேளைகளில் செறிவான இடிமின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments 0
Be the first to comment.