—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நீதிமன்றத் தீர்ப்பை மீற முடியாது

நீதிமன்றத் தீர்ப்பை மீற முடியாது

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு பௌத்த பீடங்களிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், எதிர்காலத்தில் அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு அரசாங்கம் செயற்படாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அமைவாகவே அரசாங்கம் எப்போதும் செயற்படும். சட்டத்துக்கு மேலாக நின்று எதனையும் மாற்றியமைக்க அரசாங்கம் விரும்பவில்லை.

ஞானசார தேரர் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்களால் இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகள் மற்றும் அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி உடனடியாக விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார்.

அந்தக் கலந்துரையாடலின் விளைவாகவே சிறைச்சாலை நிலையான உத்தரவுகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது. அதற்கமைய, திருத்தப்பட்ட நிலையான உத்தரவுகளின்படியே எதிர்கால நடவடிக்கைகள் அமையும்.

நாட்டில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் என்ற கொள்கையிலேயே நாம் செயற்படுகின்றோம். எனவே, நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பொன்றை நீதிமன்றத்துக்கு மேலாகச் சென்று மாற்றியமைப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை” என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.