தமிழரசு–சங்கு கூட்டணியின் புதிய நகர்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய இரு தரப்புகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரே கட்சியைப் போன்று இணைந்து செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்தால் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள புதிய சட்டமூலங்களுக்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தச் சந்திப்பில் எங்களது இரண்டு கட்சிகளினதும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆராய்ந்தோம்.
அதன் பிரதிபலனாக, இரு தரப்புகளையும் சேர்ந்த உள்ளூராட்சிச் சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குவதெனத் தீர்மானித்துள்ளோம்.
குறிப்பாக, உள்ளூராட்சி சபைகளில் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் விடயங்களில் இரு கட்சிகளும் ஒரே கட்சியைப் போன்று இணைந்து செயற்படுவதே சிறந்தது என்பதால், அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்” என்றார்.
அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,
“தற்போது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படும் ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய சட்டம்’ ஆகியவை தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்த இரு சட்டங்களும் ஏற்கனவே உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் சட்டங்களாகக் காணப்படுகின்றன.
ஆனால், பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கூட இல்லாத பல மோசமான மற்றும் ஆபத்தான அம்சங்கள் இந்த இரு புதிய சட்டங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன” என்றார்.
புதிய சட்டங்களில் உள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உதாரணமாக, பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி, பொலிஸாரிடம் வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. புதிய ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தில்’ அந்த அம்சம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அது ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய சட்டத்தில்’ மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் இருந்த அனைத்து மோசமான அம்சங்களும், அதைவிடக் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய ஏற்பாடுகளும் இந்த இரண்டு சட்டங்களிலும் கொண்டுவரப்படுகின்றன.
இதற்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து வலுவான போராட்டமொன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இது குறித்த முழுமையான விவரங்களை எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் விரைவில் அறிவிப்போம்” என்றார்.

Comments 0
Be the first to comment.