—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

செம்மணி மனிதப் புதைகுழி; புதிய கோரிக்கை!

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப்., இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நில ஆக்கிரமிப்பு மற்றும் நீதி வழங்கப்படாமை தொடர்பில் கனேடிய அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி., சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீனமான தடயவியல் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 171 ஏக்கர் பூர்வீகக் காணிகளையும், யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் 2,117 ஏக்கர் காணிகளையும் உடனடியாக உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தையிட்டி காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை மற்றும் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்டமை தொடர்பிலும் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்குச் சிறீதரன் எம்.பி. கொண்டு வந்தார்.

போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேற முடியாத சூழல் தொடர்வதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்விகளும் தீர்க்கப்படாமல் உள்ளதைச் சிறீதரன் எம்.பி. தலைமையிலான குழுவினர் சுட்டிக்காட்டினர்.

சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாக கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, செம்மணி மனிதப் புதைகுழி, கேப்பாப்பிலவு மற்றும் வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புகள் தொடர்பான விரிவான ஆவணங்களைச் சிறீதரன் எம்.பி. கனேடிய அதிகாரிகளிடம் கையளித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.