34 நிறுவனங்களை மூடத் தீர்மானம்!
காலத்துக்குப் பொருத்தமற்ற மற்றும் செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சில நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கும் நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற அரச நில அளவையாளர்கள் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் நியமனங்கள் காரணமாக அரச சேவையின் கீழ்மட்டப் பதவிகள் பெருமளவில் நிரம்பியுள்ளன என்றும், இதனால் அரசாங்கத்துக்குப் பாரிய செலவுச் சுமை ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரச நிறுவனங்களை மூடுவது அல்லது ஒன்றிணைப்பது தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சினூடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
“சில நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் நிலவிய தேவைகள் இன்று மாறியுள்ளன. அன்று அரசாங்கம் மட்டுமே முன்னெடுக்க வேண்டியிருந்த சேவைகளை இன்று தனியார் துறை திறம்பட முன்னெடுக்கின்றது. எனவே, தேவையற்ற நிறுவனங்களை நிர்வகிப்பதை விடவும், தனியார் துறையிடமிருந்து சேவைகளைப் பெறுவது இலாபகரமானதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
நாட்டில் ஏற்படும் உள்நாட்டுப் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்குப் போதுமான ரூபாய் கைவசம் உள்ளபோதிலும், சர்வதேச மற்றும் வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு பொருளாதாரம் இன்னும் பலமடையவில்லை.
அரச சேவையில் தொழில்வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் பாரிய சவால்கள் நிலவுகின்றன. திறமையான அரச பொறிமுறையை உருவாக்காமல், திறைசேரி நிதியை கீழ்மட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், 2027ஆம் ஆண்டில் சம்பள அதிகரிப்புக்காக 110 பில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது. இதனால், தற்போதைய வரவு - செலவுத் திட்டத்தில் அத்தியாவசியக் கொடுப்பனவுகளை வழங்குவது குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
2028ஆம் ஆண்டில் புதிதாக அடிப்படைச் சம்பள உயர்வு இருக்காது. எனினும், தொழில்வல்லுநர்களை அரச சேவையில் தக்கவைத்துக்கொள்வதற்குத் தேவையான கொடுப்பனவுகள் குறித்து அந்தக் காலப்பகுதியில் விரிவாகப் பரிசீலிக்கப்படும்” என்றார்.

Comments 0
Be the first to comment.