ஞானசாரர் விவகாரத்தில் உறுதியான முடிவு!

நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் நிலைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒருபோதும் செல்லமாட்டார் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கே.எம். ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலங்களில் இருந்த ஜனாதிபதிகளைப் போன்று தற்போதைய ஜனாதிபதி நீதித்துறை விவகாரங்களில் தன்னிச்சையாகத் தலையிடமாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுயாதீனமான நீதிமன்றத் தீர்ப்புகளைக் கௌரவிப்பதும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைநாட்டுவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை இலக்குகள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் அல்லது தனிப்பட்ட நலன்களுக்காக நீதித்துறை நடைமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஜனநாயகத்துக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புகள் நாட்டின் சட்ட ஒழுங்கையும் நீதித்துறை மீதான நம்பிக்கையையும் சீர்குலைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அத்தகைய தவறான முன்னுதாரணங்களைத் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் பின்பற்றாது என்றும் உறுதியளித்துள்ளார்.
எனவே, சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என யாரும் எதிர்பார்க்கக் கூடாது எனத் தெரிவித்த அமைச்சர் கே.எம். ஆனந்த விஜேபால, நாட்டின் நீதித்துறை கட்டமைப்புக்கு அனைவரும் மதிப்பளித்து நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments 0
Be the first to comment.