முல்லைமண்ணில் பாரம்பரியக் கலைகளின் சங்கமம்!
முல்லை மண் வீரம் செறிந்த மண் எனவும், தனக்கே உரித்தான தனித்துவமான கலைகளைப் பேணிப் பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், அவற்றைத் தொடர்ந்து பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பெரிதும் துணைநிற்கும் எனக் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் ஆகியன இணைந்து நடத்தும் ‘பாரம்பரியக் கலைகளின் சங்கமம் – முல்லைமோடி 2026’ மற்றும் ‘பாரம்பரிய உணவுகளின் சங்கமம் – முல்லைச்சுவை 2026’ ஆகிய நிகழ்வுகளின் முதலாம் நாள் நிகழ்வு நேற்று (23.10.2026) வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கடற்கரையில் ஆரம்பமானது.
விருந்தினர்கள் குடமூதற்கும்மி கிராமிய நடனத்துடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரம்பரிய உணவுகளின் சங்கம நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தில் இயற்கை வளங்களிலும் மனித வளங்களிலும் சிறந்து விளங்கும் மாவட்டமாக முல்லைத்தீவு திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், வறுமை அதிகமாகக் காணப்படும் மாவட்டமாகவும் இது இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிலைமையை மாற்றுவதற்கான சிறந்த வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் எமது மக்கள் பாரம்பரிய உணவுகளைத் தேடுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த இவ்வாறான உணவுகள் இன்று அருகிவரும் நிலையில், அவற்றை உணவுத் திருவிழாக்கள் ஊடாக மக்களிடம் கொண்டுசேர்ப்பது அவசியம் என்றும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இவ்வாறான நிகழ்வுகள் சுற்றுலாசார் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீரம் செறிந்த முல்லை மண்ணின் வரலாற்றையும் அதன் தனித்துவமான கலைவடிவங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் இந்நிகழ்வுகள் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவித்த ஆளுநர், தாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் விடிய விடியக் கூத்துகளைப் பார்த்த அனுபவங்களையும் நினைவுகூர்ந்தார்.
மேலும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக தற்போதைய மாவட்டச் செயலர் அ. உமாமகேஸ்வரன் பணியாற்றிய காலத்திலும், தற்போது திணைக்களப் பணிப்பாளராகப் பணியாற்றும் ய. அநிருத்தனன் அவர்களின் காலத்திலும் அருகிவரும் நூல்களை மீள்பதிப்புச் செய்து வெளியிடும் பணி முன்னெடுக்கப்படுவதை ஆளுநர் பாராட்டினார். இப்பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், முல்லைமணி வே. சுப்பிரமணியம் எழுதிய ‘பண்டாரவன்னியன்’, ‘வன்னியர் திலகம்’ ஆகிய நூல்களும், என். எஸ். மணியம் எழுதிய ‘முல்லைமோடி – பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து’ என்ற நூலும் மீள்பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், மல்லாவி தமிழ்த்தாய் கலாமன்றம் வழங்கிய காத்தவராயன் கூத்தும், கற்சிலைமடு பரந்தாமன் நாடக கலாமன்றம் வழங்கிய பண்டாரவன்னியன் நாடகமும் மேடையேற்றப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத் தலைவர் கலாநிதி ஜே. விவேகானந்தன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அநிருத்தனன், கரைதுறைப்பற்று, துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments 0
Be the first to comment.