88–89 காலத்தை நினைவுபடுத்திய சாகர

1987–1989 காலப்பகுதியில் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலைமை குறித்து இன்றைய இளைஞர்கள் முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அக்காலத்தில் வீட்டில் மின்விளக்கை ஏற்றக்கூடாது என்ற உத்தரவை மீறினால், வீட்டுக்கு வந்து சுட்டுக் கொ**லை செய்யும் நிலைமை இருந்ததாகவும், தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்ற மக்கள் விடுதலை முன்னணியின் தீர்மானத்தை மீறி வாக்களித்தவர்களின் கைகளை வெட்டிய சம்பவங்களும் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவர்களின் உத்தரவுகளை ஏற்காதவர்களின் கழுத்துகளை வெட்டி வேலிகளில் குத்திவைத்ததாகவும், சந்தி சந்தியாகச் ச**டலங்கள் காணப்பட்டதாகவும் சாகர காரியவசம் தெரிவித்தார். அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் நன்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுவது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமது நோக்கம் எனக் கூறினார்.
கடந்த தேர்தலுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் மக்களின் மனநிலையைத் திரிபுபடுத்துவதற்குத் தனது அமைப்பைப் பயன்படுத்தியதாகவும், அந்தச் செயற்பாடு இன்றும் தொடர்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, தமது கட்சியின் பிரதான செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட கிராம மட்டத்தில் அரசியல் கருத்துகளை முன்வைக்கக்கூடிய தலைவர்களுக்கு நாட்டில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பாக அறிவூட்டத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனநாயக நாடு என்பது மக்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையில் ஆட்சி நடைபெறும் நாடாகும் எனக் குறிப்பிட்ட அவர், 30 ஆண்டுகளாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் ஒரு கட்டத்தில் முடிவெடுத்து அவரை ஆட்சியிலிருந்து அகற்றியமை ஜனநாயகத்தின் பண்பு எனத் தெரிவித்தார்.
மக்கள் தமது விருப்பத்துக்கேற்ப முடிவெடுப்பதற்குச் சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டும் என்றும், அதற்கு சட்டத்தின் ஆட்சி அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டத்தின் ஆட்சி இருப்பதால்தான் மக்கள் தங்களையும் தமது குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் அரசியல் முரண்பாடுகளால் வாக்குவாதங்களில் ஈடுபட்டாலும், சட்டம் நடைமுறையில் இருந்தால் அவர்களைப் பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று, தமது மகள்கள் பாதுகாப்பாகக் கல்வி கற்கச் சென்று திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும் பெற்றோருக்கு இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போனால் அந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போய்விடும் என்றார்.
எனவே, நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகச் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சாகர காரியவசம் வலியுறுத்தினார்.

Comments 0
Be the first to comment.