டெங்கு அபாயத்தில் 32 பிரிவுகள்!

நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட 32 சுகாதார அலுவலர் பிரிவுகளைக் குறிவைத்து, விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 104,094 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 79 மரணங்களும் பதிவாகியுள்ளன.
பதிவான நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கம்பஹா, கண்டி, களுத்துறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது 32 சுகாதார அலுவலர் பிரிவுகள் அதிக டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 360 சுகாதார அலுவலர் பிரிவுகளில் சுமார் 175 பிரிவுகள் அதிக அபாயம் உள்ளவையாக அறிவிக்கப்பட்டிருந்தன.
தற்போது 13 மாவட்டங்களில் உள்ள அதிக அபாயம் கொண்ட சுகாதார அலுவலர் பிரிவுகளில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நவம்பர் 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தற்போதே நடைமுறைப்படுத்துவதன் மூலம், அடுத்த மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.

Comments 0
Be the first to comment.