—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

திடீரென உயர்ந்த கோதுமை மாவின் விலை!

திடீரென உயர்ந்த கோதுமை மாவின் விலை!

எவ்வித முன்னறிவிப்புமின்றி கோதுமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 13 ரூபாவால் அதிகரித்தமைக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன், கோதுமை மாவின் விலை அதிகரிப்பு குறித்து ஊடகங்கள் ஊடாகவே தாங்கள் அறிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திடீர் விலை உயர்வு தொடர்பில் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் உடனடியாக விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், விலை அதிகரிப்புக்கான காரணங்களை மின்னஞ்சல் ஊடாக வினவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைச் சட்டத்தின் கீழ், கோதுமை மா நிர்ணயிக்கப்பட்ட அல்லது அத்தியாவசியப் பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அதன் விலையைத் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் நேரடியாகத் தலையீடு செய்யும் அதிகாரம் உள்ளது.

கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு முன்பாக, உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறையாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, விலை உயர்வுக்கான நியாயமான காரணங்களை முன்வைத்து, இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை எட்டிய பின்னரே புதிய விலையைச் சந்தையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது சட்டபூர்வமான நடைமுறையாகும்.

எனினும், தற்போதைய விலை உயர்வுக்கு முன்னர் எந்தவிதமான அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரசபையுடன் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிகாரசபையின் சட்டரீதியான அதிகாரத்தைப் புறக்கணிக்கும் செயலாகக் கருதப்படுவதால், விலை உயர்வு தொடர்பில் உற்பத்தி நிறுவனங்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், கடுமையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.