துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – சஜித் சவால்

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசுக்குத் துணிவிருந்தால், விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.
முன்னர் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரைத் தெய்வங்களாகக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியினர் (மாலிமா), இன்று ஆடம் ஸ்மித் போன்ற பொருளியலாளர்களைத் தெய்வங்களாகக் கொண்டு, இடதுபுறம் சைகை காட்டிவிட்டு வலதுபுறமாகச் செல்லும் புதிய தாராளவாதத்தின் முதன்மைத் தந்தைகளாக மாறியுள்ளதாகவும் அவர் சாடினார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வறுமையை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்றும் தவறான மற்றும் அறிவியல் அடிப்படையற்ற தரவுகளின் அடிப்படையில் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
வறுமை ஒழிப்புத் திட்டத்தில் நுகர்வு, உற்பத்தி, சேமிப்பு, முதலீடு, ஏற்றுமதி என அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டும். ஆனால், அஸ்வெசும திட்டத்தில் நுகர்வு மட்டுமே காணப்படுகின்றது.
நாட்டின் வறுமைக் கோடு என்னவென்றே தெரியாமல் அரசாங்கம் வரவு செலவுத் திட்ட உரையை வாசிக்கத் தயாராகி வருகின்றது. நாட்டில் வறுமை 30 முதல் 40 சதவீதம் வரை காணப்படும் நிலையில், 18 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே மிக அதிகளவிலான வேலையின்மை நிலவும் நாடாக இலங்கை இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடுகின்றதே தவிர, நாட்டைப் பற்றிச் சிந்திப்பதில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் வரி வருமான இலக்குகளைக் குறிப்பிடும்போது, மக்கள் மீது மேலதிக வரிச்சுமையைச் சுமத்தி அந்த இலக்குகளை அரசாங்கம் மேலும் உயர்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் பெற்றோல், டீசல் விலைகளைக் குறைப்பதாக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இன்று எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மக்களின் பொருளாதார உரிமைகளை மீறிக்கொண்டே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறி அடக்குமுறைச் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவருகின்றது.
அரசியல் ரீதியாகத் தமக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களை நசுக்குவதற்கே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவுள்ளது.
அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்து, மக்களாணையைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றது. எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்துக்குத் துணிவிருந்தால் விரைந்து மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.
மேலும், தற்போதாவது வரிச்சுமைகளைக் குறைத்து மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதுடன், வேலையின்றி நடுத்தெருவில் நிற்கும் 80 ஆயிரம் பட்டதாரிகள், ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Comments 0
Be the first to comment.