—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் 247 நிறுவனங்கள் கௌரவிப்பு

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளைப் பெற்றுக்கொண்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த 247 நிறுவனங்களை மதிப்பளிக்கும் நிகழ்வில், பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோர் பங்கேற்றனர்.

கிளிநொச்சி ஆர்.எஸ். கிரீன் பாரதி ரிசோர்ட்டில் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை இந்நிகழ்வு நடைபெற்றது. விருந்தினர்கள் இன்னிய வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.

சுமார் 20 ஆண்டுகளாகச் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்பட்டு வந்த தேசிய உற்பத்தித்திறன் கீதம், முதன்முறையாகத் தமிழ் மொழியில் இன்றைய நிகழ்வில் இசைக்கப்பட்டது. இது நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் 2025/2026ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, நாடு முழுவதிலுமிருந்து 6,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 3,000 நிறுவனங்கள் போட்டிக்காகப் பதிவு செய்யப்பட்டன.

முதற்கட்டத் தெரிவின் பின்னர், 2,056 நிறுவனங்கள் நேரடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில், 1,169 நிறுவனங்கள் விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டன.

இப்போட்டியில் பொன்விருது, முதலாம் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம், விசேட திறமை மற்றும் திறமை ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த நிறுவனங்களில் விசேட திறமை மற்றும் திறமையை வெளிப்படுத்திய 247 நிறுவனங்கள் இன்றைய நிகழ்வில் விருதுகளைப் பெற்றுக்கொண்டன.

இதில் வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் 45 நிறுவனங்கள் விசேட திறமை விருதுகளையும், 54 நிறுவனங்கள் திறமை விருதுகளையும் பெற்றுக்கொண்டன.

இந்த நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வடமத்திய மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.