—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மலையக மக்களுக்கு புதிய அடையாளம்

மலையக மக்கள் தபால் முகவரி இன்றி 203 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்துள்ளனர். தபால் முகவரி இல்லாததால், தபால்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டதுடன், வேலைவாய்ப்புகள், நேர்முகத் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளையும் இழந்துள்ளனர்.

வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களிலிருந்து கடிதங்கள் கிடைக்காத காரணத்தினாலும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக, முகவரி இல்லாததால் தங்களுடைய அடையாளத்தையும் கண்ணியத்தையும் நிலைநாட்டுவதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டளவில் மலையக மக்களுக்குத் தபால் முகவரிகளை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில், அனைத்து மலையக மக்களுக்கும் முகவரிகள் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இருப்பினும், இதுவரை அந்த உறுதிமொழி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தப் பின்னணியில், மலையக மக்களுக்குத் தபால் முகவரிகளை வழங்குவதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, Digital Democracy Initiative (DDI) நிறுவனத்தின் ஆதரவுடன் PREDO அமைப்பு, 10 தோட்டங்களை உள்ளடக்கிய முன்னோடித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது.

இதன் மூலம் குடியிருப்புப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, வீதிகளுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. டிஜிட்டல் தரவுகள் சேகரிக்கப்பட்டு, QR குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பிரதேச வரைபடங்களும் தயாரிக்கப்பட்டன. இதன் ஊடாக 1,337 குடும்பங்களுக்கு உத்தியோகபூர்வ முகவரி அட்டைகள் வழங்கப்பட்டன.

பொகவந்தலாவை ஆல்டி தோட்டத்தில், கிராம அபிவிருத்திக் குழு (VDC), மலையக பெண்கள் செயற்பாட்டுக் குழு (MAWOAC) மற்றும் சமூக அடிப்படையிலான தேர்தல் குழு (CBEC) ஆகியவை ஒன்றிணைந்து, புதிதாகப் பெயரிடப்பட்ட வீதிகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து, 137 குடும்பங்களுக்கு முகவரி அட்டைகளை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்தன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.