—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நவம்பர் 9இல் நாடளாவிய போராட்டம்

நவம்பர் 9இல் நாடளாவிய போராட்டம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நீண்டகால சேவை மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனை அதன் பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நீண்டகால சேவை மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவற்றுக்குத் தீர்வு காணப்படாததால் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தது. எனினும், அவர்களின் தொழில் முன்னேற்றம், சேவை நிலைமைகள் மற்றும் சம்பளம் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் தட்டிக்கழிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளைத் தெளிவாக வரையறுக்கும் முறையான கட்டமைப்பு இல்லாமை, பதவி உயர்வுக்கான திட்டம் இன்மை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. ஒரு தரத்திலிருந்து அடுத்த தரத்துக்கு முன்னேற சுமார் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளதுடன், அதற்கு மேலான பதவி உயர்வுக்கான உயர் தரமும் உருவாக்கப்படவில்லை.

மேலும், ஓராண்டுப் பயிற்சியை நிறைவு செய்த உத்தியோகத்தர்கள் எதிர்பார்த்தவாறு நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமை மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவம்பர் 9ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தம், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதையும், நாடளாவிய ரீதியில் கவனத்தை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.