—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நாங்கள் அடிமைகள் அல்லர் – ரிஷாத்

நாங்கள் அடிமைகள் அல்லர் – ரிஷாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்லர் என்றும், அந்த அரசியல் கூட்டணியில் தாங்களும் ஒரு முக்கிய பங்காளிகள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்த முற்போக்குக் கொள்கைகளிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தற்போது விலகிச் செல்வது தமக்குப் பெரும் கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகலில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்குவதற்காகக் கடந்த இரண்டு முக்கிய தேர்தல்களிலும் தமது கட்சியின் ஆதரவாளர்கள் இரவும் பகலும் பாராது கடுமையாக உழைத்ததாக ரிஷாத் பதியுதீன் நினைவூட்டினார்.

பெருந்தொகையான நிதியைச் செலவழித்து பொதுமக்களின் வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலில் கூட்டணிக் கட்சியாக மற்றொரு கட்சியுடன் இணைந்து பயணிக்கத் தீர்மானிக்கும்போது, எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளோ அல்லது ஏனைய பொறுப்புகளோ வழங்கப்படுவது வழமையான மரபு எனவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் தேர்தலுக்குப் பின்னர் செய்துகொண்ட உடன்பாடுகளையும் கொள்கைகளையும் மறந்து செயற்படுவது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆரம்பத்தில் வெறும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, இன்று 159 உறுப்பினர்களாகத் தனது பலத்தை உயர்த்தியுள்ளமையையும் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

இனவாதம் மற்றும் மதவாதமற்ற கொள்கை நிலைப்பாடும், நாட்டில் உண்மையான கட்டமைப்பு மாற்றம் ஏற்படும் என்ற மக்களின் நம்பிக்கையுமே அவரது வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என அவர் தெரிவித்தார்.

தற்காலிக பின்னடைவுகள் ஏற்பட்டாலும், அடிப்படையில் சரியான கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டாம் எனத் தான் சஜித் பிரேமதாஸவிடம் நேரடியாகவே வலியுறுத்தியதாகவும் ரிஷாத் பதியுதீன் கூறினார்.

இலங்கையின் கடந்தகால கசப்பான வரலாறு நாட்டு மக்களுக்குத் தெளிவான பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இனவாதமும் மதவாதமும் நாட்டுக்கோ, சமூகத்துக்கோ அல்லது எதிர்காலச் சந்ததியினருக்கோ எவ்வித நன்மைகளையும் வழங்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் தமக்குத் தொடர்ந்தும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகவும் ரிஷாத் பதியுதீன் மேலும் சுட்டிக்காட்டினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.