மாணவர்களின் கண் ஆரோக்கியத்தில் அதிர்ச்சித் தகவல்
வடக்கு மாகாண முதலாம் தர மாணவர்களில் சுமார் 10 பேரில் ஒருவருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது, 'தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம் – கட்டம் II' பாடசாலைக் கண் சுகாதாரத் திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய கண்டறிதல்கள் அடங்கிய அறிக்கையை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் நேற்று (26) ஆளுநர் செயலகத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் கையளித்தார்.
கடந்த ஜூலை 21ஆம் திகதி முதல் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 13 கல்வி வலயங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்போது, மொத்தம் 14,997 முதலாம் தர மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இது மொத்த முதலாம் தர மாணவர்களில் 92.6 சதவீதமாகும்.
கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 1,455 பேருக்கு (9.7 சதவீதம்) ஒளிவிலகல் பிழைகள் எனப்படும் பார்வைக் குவியக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் 129 மாணவர்கள் (8.9 சதவீதம்) மட்டுமே ஏற்கெனவே மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தனர். ஏனைய 1,326 மாணவர்கள் (91.1 சதவீதம்) மூக்குக்கண்ணாடி அணிந்திருக்கவில்லை.
பார்வைக் குவியக் குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஏனைய கண் பிரச்சினைகளும் மாணவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், சில மாணவர்களுக்கு மேலதிக மருத்துவப் பரிசோதனைகள், கண் நிபுணர்களின் ஆலோசனைகள், சிகிச்சைகள் மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்புகள் தேவைப்படலாம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 1,199 மாணவர்கள் கண் பரிசோதனையில் பங்கேற்கவில்லை என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், சம்பந்தப்பட்ட பாடசாலைகள் அருகிலுள்ள கண் மருத்துவ நிலையங்களைத் தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மூக்குக்கண்ணாடி அணியுமாறு பரிந்துரைக்கப்பட்ட மாணவர்கள் அவற்றைத் தொடர்ந்து அணிவதையும், மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தேவைப்படுவோர் அவற்றைத் தாமதமின்றிப் பெற்றுக்கொள்வதையும் பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திட்டத்தின் பெறுபேறுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாணவர்களின் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுத்த கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தலைமையிலான மருத்துவக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் இவ்வாறான சுகாதாரச் சேவைகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், மாணவர்கள் தேசியப் பாடசாலைகளில் கல்வி கற்கின்றனரா, மாகாணப் பாடசாலைகளில் கல்வி கற்கின்றனரா அல்லது சர்வதேசப் பாடசாலைகளில் கல்வி கற்கின்றனரா என்ற வேறுபாட்டைப் பார்க்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்காத சில பாடசாலைகளின் அதிபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும், சில இடங்களில் ஒத்துழைப்பு வழங்காத பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, தீவகம் மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலயங்களில் கண் பரிசோதனையின் அடிப்படையில் மூக்குக்கண்ணாடி அணிய வேண்டும் என அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடிகள், குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்துக்கு Alaka Foundation நிதியுதவி வழங்கியுள்ளது.
நகுலேஸ்வரி வாசுதேவன் முன்னெடுக்கும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் திட்டத்துடன் Assist RR UK & Sri Lanka நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
அறிக்கை கையளிப்பு மற்றும் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் செயலாளர்கள், கல்வி மற்றும் சுகாதாரத் திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனுசரணையாளர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments 0
Be the first to comment.