2027 வரவு - செலவுத் திட்டம்; நவம்பர் 12இல் இரண்டாம் மதிப்பீடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக ஏற்கனவே கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நிதி அமைச்சரான ஜனாதிபதி நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை (வரவு - செலவுத் திட்ட உரை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 20ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
அதன் பின்னர், நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
இறுதியாக, டிசம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அரச விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து, சனிக்கிழமைகள் உட்பட ஏனைய அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் முற்பகல் 9.30 மணிக்குக் கூடி வரவு - செலவுத் திட்ட விவாதங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவாதங்களின்போது நேரத்தைப் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தின்போது ஆளுங்கட்சிக்கு 60 சதவீதமும், எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் நேரம் ஒதுக்கப்படும்.
அதேவேளை, குழுநிலை விவாதக் காலப்பகுதியில் ஆளுங்கட்சிக்கு 40 சதவீதமும், எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

Comments 0
Be the first to comment.