நீண்ட கூந்தல் பெண்களுக்கும் சிக்கலா?

புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பிரதியில், நீண்ட கூந்தல் கொண்டவர்கள் மற்றும் பச்சை குத்திய நபர்கள் தொடர்பில் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், நீண்ட கூந்தல் கொண்ட பெண்களும் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய சட்டமூலத்தின் ஆங்கில வரைவில் நீண்ட கூந்தலைக் கொண்ட “ஆண்கள்” என்று பிரத்யேகமாகக் குறிப்பிடப்படாமல் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், பெண்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்து, மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகின்றபோதிலும், ஓட்டோக்கள் மற்றும் பேருந்துகளின் அலங்காரப் பொருள்களைக் கழற்றுவது போன்ற சிறிய விடயங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அமைதியான போராட்டங்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் அமைதியான பேரணிகளையும் பொலிஸாரைப் பயன்படுத்தி முடக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
பொலிஸ் சீருடையில் காணப்படும் தர்ம சக்கரத்தை அகற்றச் சிலர் முயற்சிப்பதையும், அமைச்சர்கள் பௌத்த பிக்குகளை இழிவுபடுத்திப் பேசுவதையும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறினார்.
அரசமைப்பின் 9ஆவது பிரிவின்படி பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், விகாரைகளிலிருந்து சிவில் பாதுகாப்புப் படையினரை விலக்கியுள்ளமை பௌத்த எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மையங்களைச் சிதைத்து, அவற்றை வேறு மத அடையாளங்களாக மாற்றும் முயற்சிகள் நாட்டின் வரலாற்று அடையாளத்தை அழித்துவிடும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கு மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளை ஏற்று, தற்போதைய ஜனாதிபதி முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றிப் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என உயர்நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, அரசாங்கம் இந்த விவகாரத்தை மேலும் இழுத்தடிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comments 0
Be the first to comment.