—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வடக்கு, கிழக்கு தலைவர்களுடன் பேச்சு!

வடக்கு, கிழக்கு தலைவர்களுடன் பேச்சு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, அந்தச் சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொழும்புக்கு அழைத்து விசேட கலந்துரையாடல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி சபைகள் வெறுமனே குப்பைகளை அகற்றும் நிறுவனங்களாக மட்டுமே இயங்குவதைத் தவிர்த்து, அவை எதிர்கொள்ளும் அடிப்படை நிதி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி சபைகளில் நிறைவேற்றப்படும் துணைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபைகளின் அனுமதியைப் பெறுவதில் நிலவும் தாமதங்கள் மற்றும் 500 முதல் 1,000 ரூபா வரையிலான குறைந்த அபராதத் தொகைகள் மூலம் போதிய வருமானத்தை ஈட்ட முடியாமை போன்ற நடைமுறைச் சிக்கல்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழியர்களின் சம்பளத்தை வழங்கிய பின்னர், சபைகளிடம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி இருப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாவட்ட ரீதியிலான உள்ளூராட்சிப் பிரதிநிதிகளைக் கொழும்புக்கு அழைத்து, அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சாணக்கியன் எம்.பி.யின் கோரிக்கைக்குப் பதிலளித்த அமைச்சர் சந்தன அபயரத்ன, உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவித்தார்.

இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றத் தலைவர்களை விரைவில் கொழும்புக்கு அழைத்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.