—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

பசுவின் பாலால் அச்சம்! 450 பேருக்கு விசர்நாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி

பசுவின் பாலால் அச்சம்! 450 பேருக்கு விசர்நாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் விசர்நாய்க்கடி பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட பசுவின் பாலில் தயாரிக்கப்பட்ட பானத்தைப் பருகிய 450 பேருக்கு விசர்நாய்க்கடிக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

தாடி காஸ் கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான நாய் கடித்ததன் பின்னர் குறித்த பசு உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரப் பிரிவினர் தடுப்பூசி வழங்கும் முகாமொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது, முதல்நாளில் சுமார் 50 பேருக்கும், அடுத்த நாள் நடைபெற்ற முகாமில் மேலும் 400 பேருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பசுவின் பால் இரண்டு விற்பனை நிலையங்களுக்கும் பல வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்ததால், தாடி காஸ் மற்றும் அண்டை கிராமமான கோவிந்த்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

பசு உயிரிழப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர், அது நோய்வாய்ப்பட்டதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இரண்டு தனியார் கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றதாகவும், பின்னர் பசு அசாதாரணமாக நடந்துகொண்டு குரைக்கத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசுவில் காணப்பட்ட அறிகுறிகள் விசர்நாய்க்கடி குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அறிகுறிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோயை உறுதிப்படுத்த முடியாது எனக் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயை உறுதிப்படுத்துவதற்கு உரிய கால்நடை மருத்துவப் பரிசோதனைகளும் ஆய்வுகளும் அவசியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.