பரீட்சைக்கு முன் நேர்ந்த சோகம்

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த களுத்துறை கல்லூரி மாணவர் ஒருவர், விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (22) உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி குறித்த மாணவர் பேருந்தில் பயணித்துள்ளார். இதன்போது, போக்குவரத்து விளக்கு அருகே பேருந்து நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாணவர் பேருந்திலிருந்து இறங்க முற்பட்டபோது பின்னால் வந்த முச்சக்கரவண்டி ஒன்று அவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, முச்சக்கரவண்டியின் சாரதி உடனடியாக மாணவரை அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் நாகொட போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும், விபத்தில் மாணவரின் முதுகெலும்பில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவர் இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், முச்சக்கரவண்டிச் சாரதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments 0
Be the first to comment.