யானைக்கு அவசர சிகிச்சை

கிழக்கு வனவிலங்கு மண்டலத்தின் அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் இயங்கும் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பகுதியின் சம்மாந்துறை பிரிவு எண் 4 இல் அமைந்துள்ள நெல் வயலில், நேற்று (21) காலை காட்டு யானையொன்று எழுந்திருக்க முடியாமல் விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகளின் தகவலின்படி, சுமார் 15 வயதுடைய ஆண் யானையொன்றே நெல் வயலின் நடுவே பலவீனமடைந்து விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மனிதர்களால் வீசப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகளை உட்கொண்டதால் ஏற்பட்ட கடுமையான செரிமானக் கோளாறு மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக, யானை சுயநினைவிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வயலில் விழுந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள், யானையின் வாயில் சிக்கியிருந்த ஆபத்தான பொலித்தீன் கழிவுகளை ஒரு குச்சியின் உதவியுடன் மிகவும் கவனமாக அகற்றியுள்ளனர்.
தொடர்ந்தும் பலவீனமான நிலையில் காணப்படும் யானைக்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில் பழங்கள் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், குறித்த யானைக்கு வனவிலங்கு சுகாதாரப் பிரிவினரால் அவசர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாகவும், யானையை முழுமையாகக் குணப்படுத்தி மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments 0
Be the first to comment.