பள்ளத்தில் பாய்ந்த வாகனம்… ஒருவர் பலி!

நுவரெலியா மாவட்டம், கொத்மலை கொட்டகபிட்டிய பகுதியில் பொல்ரக் ரக கெப் வாகனம் ஒன்று சுமார் 500 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இன்று (22.10.2026) மாலை சுமார் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொத்மலை கொட்டகபிட்டிய பகுதியிலிருந்து கடதொர பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிப் பள்ளத்தில் பாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 54 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் கொட்டகபிட்டிய வடக்கு, கடதொர பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான 50 வயதுடைய பெண் ஒருவர், சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அட்டபாகே 17ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.