—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

புதிய சட்டமூலத்துக்கு ஐ.நா. எதிர்ப்பு

புதிய சட்டமூலத்துக்கு ஐ.நா. எதிர்ப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்காகக் கடந்த காலங்களில் முன்மொழியப்பட்ட ஏனைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் காணப்பட்ட பல குறைபாடுகள், அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திலும்' உள்வாங்கப்பட்டிருப்பது குறித்துத் தீவிர கரிசனையை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி, பரந்துபட்ட மீளாய்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பணிப்புரைக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"அரசால் சமர்ப்பிக்கப்பட்ட முன்னைய வரைவுடன் ஒப்பிடுகையில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்காக முன்னர் முன்மொழியப்பட்ட ஏனைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் காணப்பட்ட பல குறைபாடுகள் இந்தச் சட்டமூலத்திலும் உள்ளடங்குவது தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்.

குறிப்பாக, பயங்கரவாதக் குற்றங்கள் எனும் பதம் பரந்துபட்ட அடிப்படையிலும் போதிய தெளிவின்றியும் வரையறுக்கப்பட்டிருத்தல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஏனைய சிவில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையிலான மட்டுப்பாடுகள், நிர்வாகத் தடுப்புக்காவல், போதிய நீதித்துறை மேற்பார்வையின்மை, கைது செய்வதற்கும் சோதனைகளை நடத்துவதற்குமான பரந்துபட்ட அதிகாரங்கள், நிறைவேற்று அதிகாரத்தின் வசம் மட்டுமீறிய தன்னிச்சையான அதிகாரங்கள், சித்திரவதைகள் மற்றும் மிக மோசமாக நடத்தப்படுவதிலிருந்து போதிய பாதுகாப்பின்மை, நியாயமான விசாரணைகள் மற்றும் தீர்வுகள் என்பன ஆழமான கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன.

பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் சட்டபூர்வ நியமங்களுக்கு உட்பட்ட விதத்திலும், தெளிவானதும் குறுகியதுமான வகையிலும் வரையறுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், சங்கம் அமைத்தல், மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம், பொது நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் போதிய பாதுகாப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

அத்தோடு, எந்தவொரு கட்டுப்பாடும் சட்ட நியமங்களுக்கு உட்பட்டதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

அதேவேளை, தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் நிர்வாகத் தடுப்புக்காவல் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவது குறித்து மிகுந்த கவலையடைகின்றோம். சிவில் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் உடனடியானதும் முறையானதுமான நீதித்துறைக் கண்காணிப்புக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

அடுத்ததாக, நீதிமன்ற அனுமதியின்றி கைது, சோதனையிடல், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முப்படையினர் மற்றும் கரையோரக் காவல்படையினருக்குப் பரந்துபட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீதிமன்ற அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் அவசர மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் குறுகியகால அடிப்படையில் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறானதொரு பின்னணியில், இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் இதுபற்றிச் சிவில் சமூக அமைப்புகள், சுயாதீன கட்டமைப்புகள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, மீளாய்வொன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை ஊக்குவிக்கின்றோம்.

அத்தோடு, பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான வரையறையைக் குறுகியதாகவும் தெளிவாகவும் வரையறுத்தல், கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பில் சுயாதீன நீதிமன்ற மேற்பார்வையை உறுதி செய்தல், சித்திரவதைகள், முறையற்ற விதத்தில் நடத்தப்படல், வலிந்து காணாமல் ஆக்கப்படல் என்பவற்றுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தல், முறையான சட்ட நடவடிக்கை மற்றும் நியாயமான விசாரணை என்பவற்றுக்கான உத்தரவாதத்தை வலுப்படுத்தல், சோதனையிடல் மற்றும் பறிமுதல் செய்தல் என்பவற்றுக்கு நீதிமன்ற அனுமதியைக் கட்டாயமாக்குதல், சிவில் சேவையில் பொலிஸாரே பிரதானம் என்பதை உறுதிப்படுத்தல் ஆகிய பரிந்துரைகளையும் முன்வைக்கின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.