புனரமைப்பின்றி ஆபத்தில் கடற்பாலம்
யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவகப் பகுதிகளையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து மார்க்கமான புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம், நிரந்தரப் புனரமைப்பின்றி காணப்படுவதுடன், அதன் இரு கரையோரப் பகுதிகளும் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. மேலும், பாதுகாப்புக் கற்களோ அல்லது இரும்புத் தடுப்புகளோ இல்லாததால், மழைக்காலத்தில் பாரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் மற்றும் வாகன சாரதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் நீளமான கடற்பாலங்களில் ஒன்றான, சுமார் 5 கிலோமீற்றர் நீளமுடைய இப்பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ளது. இதனைப் பாதுகாப்பான முறையில் புனரமைத்து, மக்கள் அச்சமின்றிப் பயணிப்பதை உறுதிப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தற்போதைய அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு உள்ளிட்ட தீவகப் பகுதிகளின் போக்குவரத்தில் இப்பாலம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
குறிப்பாக, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், நாக விகாரை மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் பயணிப்பதற்கான முக்கிய போக்குவரத்து மார்க்கமாக இவ்வீதி காணப்படுகின்றது.
அத்துடன், கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் நாளாந்தம் இப்பாலத்தின் ஊடாகப் பயணிக்கின்றனர்.
இதனால், தீவகத்தின் பொருளாதார மற்றும் மக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இப்பாலம் இன்றியமையாததாக விளங்குகின்றது.
யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தீவகத்தின் பிரதான வீதிகளைப் புனரமைப்பதற்கான பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவுகளின் அடிப்படையில் தீவகத்தின் பிரதான வீதிகளைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில், குறிகாட்டுவான் – வழுக்கையாறு வீதியை மீளமைப்பதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டிருந்தது. சுமார் 27.5 கிலோமீற்றர் நீளமுடைய இவ்வீதியில் 5 கிலோமீற்றர் மற்றும் 2 கிலோமீற்றர் நீளமுடைய இரண்டு பெரிய பாலங்கள் அமைந்துள்ளன. வீதியின் நீளம் மற்றும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு நிதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அபிவிருத்திப் பணிகள் தாமதமடைந்திருந்தன.
இந்நிலையில், நீண்டகாலமாகச் சிறு சிறு புனரமைப்புகளுடன் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட குறித்த வீதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், நயினாதீவு விகாராதிபதியின் வலுவான கோரிக்கையைத் தொடர்ந்து, வேலணை அராலிச் சந்தியிலிருந்து குறிகாட்டுவான் வரையான பகுதியில் அகலப்படுத்தப்படாமல், தற்காலிகமாகக் காப்பெற் இடப்பட்டுச் செப்பனிடப்பட்டது.
எனினும், புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலத்தின் கட்டமைப்பில் நிரந்தரப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படாத நிலையில், அதன் இரு கரையோரப் பகுதிகளும் தற்போது பெரும் சேதமடைந்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மறுபுறம், குறித்த வீதி ஒடுங்கிய நிலையில் காணப்படுவதால், வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்வதும், எதிரெதிரே வரும் வாகனங்கள் பாதுகாப்பாக விலகிச் செல்வதும் பெரும் சவாலாக உள்ளது.
மேலும், பாலத்தின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததுடன், வீதியும் ஆங்காங்கே சிதைவடைந்து காணப்படுகின்றது.
இதனால், வாகனங்கள் வீதியை விட்டு விலகிக் கடலுக்குள் சென்ற சம்பவங்களும், விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, இப்பாலத்தின் ஊடாகப் பயணிக்கும் சாரதிகளும் பயணிகளும் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், பாலத்தின் சேதமடைந்த பகுதிகள் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
எனவே, வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, பாலத்தின் இரு கரையோரங்களையும் சீரமைப்பதுடன், பாதுகாப்புத் தடுப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
அத்துடன், குறிகாட்டுவான் இறங்குதுறையைச் சீரமைக்கும் தற்போதைய அரசாங்கம், தற்காலிகத் திருத்தங்களுடன் காலத்தைக் கடத்தாமல், தீவக மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் தேவையைக் கருத்திற்கொண்டு, குறிகாட்டுவான் – வழுக்கையாறு வீதி மற்றும் புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலத்தை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீட்டையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Comments 0
Be the first to comment.