கோழி இறைச்சி விற்பனையில் புதிய நடைமுறை
நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்துவது இன்று (29.10.2026) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் அறிவித்துள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (28) தவிசாளர் தலைமையில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் வர்த்தகர்களுடனான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
பொதுமக்கள் மற்றும் சபை உறுப்பினர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு அமைவாக, கோழி இறைச்சியின் சில்லறை விலை தொடர்பில் இதன்போது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது. தற்போதைய பொருளாதாரச் சூழலில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது, நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து கோழி இறைச்சிக் கடைகளிலும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையைத் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நடைமுறை இன்று (29.10.2026) முதல் அமுலுக்கு வருகிறது.
விலையைக் காட்சிப்படுத்தத் தவறும் வர்த்தகர்கள் தொடர்பில் கடுமையான பரிசீலனை மேற்கொள்ளப்படுவதுடன், அவர்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் தொடர்பாகப் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபையின் செயலாளர், சம்பந்தப்பட்ட விடயங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

Comments 0
Be the first to comment.