பொதுமன்னிப்பு குறித்து கேள்வி
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பால் எதையும் செய்யப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவிப்பதில் உண்மையில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவ்வாறானால், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பெப்ரவரி 4ஆம் திகதிகளில் 300க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளுக்கு எந்த அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி, கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக நாட்டின் மகா சங்கத்தினர் காவி உடையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அகிம்சை வழியில் செயற்பட்டு, ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்குப் ஜனாதிபதி எவ்வாறு பதிலளித்தார் என்பதை அனைவரும் கண்டதாகக் குறிப்பிட்ட அவர், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தனது கட்சித் தொண்டர்களின் பலத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களையும் அகிம்சை வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் கலைக்க ஜனாதிபதி முயன்றதாகக் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமன்றி, கொழும்பு மாநகர மேயரைப் பயன்படுத்தி, பொதுமக்கள் பயன்படுத்தும் மலசலகூடங்களைக்கூட மூடும் அளவுக்கு அரசாங்கம் மனிதாபிமானமற்ற நிலைக்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.
இனிமேல் நாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பெவத்தையின் அனுமதி அவசியமாகிவிட்டது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகச் சம்பிக்க ரணவக்க விமர்சித்தார்.
பெவத்தைக்கு எந்தவிதமான பேரணிகளையும் பதுளையிலும் கொழும்பிலும் நடத்தவும், வீதிகளை முடக்கவும் அனுமதி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஏனையவர்களின் அமைப்புரிமை மற்றும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமைகளுக்குக்கூட பெவத்தையின் அனுமதி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இது ஆபத்தான போக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் ஏனைய பிரிவுகளை அரசாங்கம் மிக மோசமாகத் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் ஒரு சிறிய பதுங்குக்குழியை அமைத்துக்கொண்டு, அதற்குள் இருந்தே அரசியல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நல்லாட்சி காலத்தில் மாத்திரம் மக்கள் விடுதலை முன்னணி நாட்டில் 560க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தியதாகத் தனக்கு நன்றாக நினைவிருப்பதாகக் குறிப்பிட்ட சம்பிக்க ரணவக்க, அதற்கான பொலிஸ் பதிவுகள் இருப்பதாகவும் கூறினார். அக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பல இடங்களில் வீதிகள் முடக்கப்பட்டதுடன் பேரணிகளும் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்துக்குத் தீ வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்தச் சந்தர்ப்பங்களில் அப்போதைய அரசாங்கம் தற்போதைய அரசாங்கத்தைப் போன்று பொலிஸ் பலத்தைப் பயன்படுத்தவில்லை என்றும், மலசலகூடங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது எதிர்கொண்டுள்ள நிலை என்ன என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பால் எதையும் செய்யப்போவதில்லை என ஜனாதிபதி பதுளையில் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய சம்பிக்க ரணவக்க, நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 285 பேரை 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார விடுதலை செய்ததாகவும், 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி மேலும் 49 பேரை விடுதலை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதன் விளைவாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், அதனால் ஆணையாளரின் மனித உரிமைகள் மீறப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், அவர் இதுவரை மீண்டும் பதவியில் அமர்த்தப்படவில்லை என்றும் கூறினார்.
சிறைச்சாலைகள் ஆணையாளரின் பதவியைப் பறிக்கும் நோக்கில் சில சிறைச்சாலை அதிகாரிகள் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்து வருவதாக, அண்மையில் ஞானசார தேரரைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய சட்டத்தரணி ஒருவர் தனது யூடியூப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது ஒரு கேலிக்கூத்தாகும் எனக் குறிப்பிட்ட அவர், நீதிமன்றச் சட்டம் ஞானசார தேரருக்கு மட்டும்தான் பொருந்துமா எனக் கேள்வி எழுப்பினார். 2025ஆம் ஆண்டு 285 பேர் விடுதலை செய்யப்பட்டபோதும், 2026ஆம் ஆண்டு 49 பேர் விடுதலை செய்யப்பட்டபோதும் அந்தச் சட்டங்கள் ஜனாதிபதிக்குப் பொருந்தவில்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Comments 0
Be the first to comment.