மேய்ச்சல் நிலம் சர்ச்சை

மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் அத்துமீறி விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதுடன், கால்நடைப் பண்ணையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக மயிலத்தமடு, மாதவனை கால்நடைப் பண்ணையாளர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால் தாங்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மயிலத்தமடு, மாதவனை கால்நடைப் பண்ணையாளர்கள் அமைப்பினர் மற்றும் மகாவலி, வன இலாகா அதிகாரிகளுக்கு இடையிலான கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, மயிலத்தமடு, மாதவனை கால்நடைப் பண்ணையாளர்கள் அமைப்பின் தலைவர் சீ. நிமலன் தலைமையில் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் தமது கால்நடைகளைப் பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டனர்.
மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ளும் குழுவினர், தங்களை வேறு இடங்களுக்குச் செல்லுமாறு கூறுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். கால்நடைகளைப் பராமரிப்பதற்காக அடர்ந்த காட்டுக்குள் செல்லுமாறு கூறுவது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், இத்தகைய சூழலில் கால்நடைகளைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கான இடம்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாத நிலையில், தமது உயிரையும் கால்நடைகளையும் பாதுகாப்பதற்காகத் தத்தமது விவசாய நிலங்களுக்குக் கால்நடைகளைக் கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கான பொறுப்பை விவசாய அமைப்புகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒவ்வொரு விவசாயியும் தமது வயல்களில் கால்நடைகளைக் கட்டிவைத்துப் பராமரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கால்நடைகளை அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று பராமரிப்பது பாதுகாப்பான தீர்வாக அமையாது எனத் தெரிவித்த பண்ணையாளர்கள், காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தல், கால்நடைகளுக்கான உணவு மற்றும் நீர் வசதிகள், மனிதர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அங்கு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
தமது வாழ்வாதாரத்தையும் கால்நடைகளையும் பாதுகாப்பதற்கான உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், தமது கால்நடைகளைத் தத்தமது விவசாய நிலங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Comments 0
Be the first to comment.